இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகின்ற நிலையில் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்கள் முடக்க
நிலையில் உள்ளன.
நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஐ
அண்மித்துள்ளது.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில் ஓகஸ்ட் மாதமளவில் அந்த தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி மேல் மாகாணத்தின், கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், அவரது மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டு பிரதேசத்தின் பல பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர், மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள், அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக, குறித்த தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள், அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என நாட்டில் ஆங்காங்கே ஒரு சில பிரதேசங்களில் தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டனர்.
அதனையடுத்து, கம்பஹா மாவட்டத்தில் உள்ள 12 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டிருந்ததுடன், குறித்த தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள், விடுமுறையில் சென்றவர்கள், அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், அவர்கள் பயன்படுத்திய பொதுப் போக்குவரத்து என தேடுதல் வேட்டை
ஆரம்பமானது.
பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் என சுகாதாரத்துறையினர், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைத்ததுடன் பிசிஆர் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.
மினுவாங்கொட கொரோனா தொற்று ஒரு கொத்தணியாக அடையாளம் காணப்பட்ட நிலையில், அடுத்ததாக பேலியகொட மீன் சந்தையில் தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டனர்.
பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றும் 49 பேருக்கு முதலில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அடுத்தடுத்த நாட்களில் அந்த எண்ணிக்கை அதிகமானது.
இதன் பின்னர் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய பலர் தற்போது வரையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருவதுடன், நாட்டின் அனைத்துப் பிரதேசங்களும் அது
பரவலடைந்துள்ளது.
பேலியகொட கொரோனா கொத்தணியின் பரவல் தலைநகர் கொழும்பை மாத்திரமன்றி, மலையகம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் தொற்றாளர்களை உருவாக்கியுள்ளது.
இதனையடுத்து, தொடர்ந்து கொழும்பின் சில பகுதிகள் முடக்கப்பட்டன.
கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை, மருதானை, மட்டக்குளி, ஆட்டுப்பட்டித்தெரு என பல பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இதுமாத்திரமன்றி, கொழும்பை அண்மித்த, மொரட்டுவை, பானந்துறை மற்றும் ஹோமாகம உள்ளிட்ட மூன்று பிரதேசங்களும் முடக்கப்பட்டன. இந்நிலையில் இன்றைய தினம் முதல் எதிர்வரும் 02ஆம் திகதி வரை மேல் மாகாணம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இதுரை சுமார் 30 சுகாதார வைத்திய அதிகாரிகள் அல்லது பொலிஸ் பிரிவுகளில் குறைந்தது ஒருவரேனும் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து செல்லும் பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, கொழும்பில் இயங்கும் பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. சில நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள்
இடம்பெறுகின்றன.
மூன்று நாட்களுக்கு மேல் மாகாணம் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை முதல் முண்டியடித்துக்கொண்டிருந்ததை
அவதானிக்க முடிந்தது.
மேல் மாகாணத்தின் முடக்கத்தால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளதோடு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தினக்கூலிகளாக இருக்கும் பலரது அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வர்த்தக நடவடிக்கைகளும்
பாதிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் தனியார் மற்றும் வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் தலைநகர் இன்று அமைதிப்பூங்காவாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே ஒருசில வாகனங்கள், பாதுகாப்புத் தரப்பினரைத் தவிர வேறு எவரையும் காண முடியவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக