நாட்டில் சுகாதார அமைச்சினால், 2006 ஆம் ஆண்டு 31.71 மில்லியன் ரூபா செலவில், கைவிரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் 224 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோதும், 15 வருடங்களுக்கு மேலாக அவை செயலற்ற நிலையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவான கோப் குழுவில், இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில், கோபா குழு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், சுகாதாரத்துறை அபிவிருத்தி விரிவாக்கத் திட்டத்தின்கீழ், ஐந்து வருடங்களில் புத்தாக்கத் திட்டங்களை ஊக்குவிக்க, 346 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 34 புத்தாக்க ஆய்வுத் திட்டங்களுக்காக, 399 மில்லியன் ரூபாவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்தும், அரசாங்க கணக்குகள் பற்றிய குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது. தனிநபர் ஒருவர் மேற்கொண்ட ஆராய்ச்சி, திட்டங்களின் பயனற்ற தன்மைக்கு வழிவகுத்தன என்பதும் இதன்போது தெரியவந்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்
குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம், களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு, 7 மாடிகளைக் கொண்ட மிலேனியம் சிகிச்சையறை தொகுதியை அமைப்பதற்கு, 398 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம், கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத் தொகுதியின் பணிகள், 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி பூரணப்படுத்தப்பட்டிருக்க வேண்டியபோதிலும், 2014 மார்ச் 06 ஆம் திகதி வரையில், அந்தப் பணிகள் பூர்த்திசெய்யப்படாது ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமையும் கோபா குழுவில் புலப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரையான காலப்பகுதியில், குறித்த ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்ட, 51 மில்லியன் ரூபாவை மீளப்பெற முடியாமல் போனமை குறித்தும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு விசேட கவனம் செலுத்தியது. இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அந்தக் குழு பணிப்புரை வழங்கியதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக